மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இராணுவப் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் முன்மொழியப்பட்ட ‘சமாதான சபை’ (Board of Peace) தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் இந்தோனேசியா தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுகியோனோ (Sugiono) இது குறித்துத் தெரிவிக்கையில், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய இராணுவ மோதல்கள் மற்றும் பதற்றங்கள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இந்த மோதல்கள், சமாதான சபை முயற்சியில் ஈடுபட்டுள்ள நாடுகளின் வெளியுறவு கொள்கையின் முன்னுரிமைகளில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது சர்வதேச சமூகத்தின் கவனம் ஈரான் உடனான மோதலின் விளைவுகளை நோக்கியே திரும்பியுள்ளதாக அமைச்சர் விளக்கினார். தற்போதைய தாக்குதல்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள வளைகுடா பிராந்திய நாடுகளுடன் இந்தோனேசியா தீவிர ஆலோசனைகளை மேற்கொள்ளும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
டிரம்ப் தலைமையிலான இந்த அமைப்பில் இணைவது, பாலஸ்தீன விவகாரத்தில் இந்தோனேசியாவின் நீண்டகால நிலைப்பாட்டை சிதைக்கக்கூடும் என அந்நாட்டின் அரசியல் மற்றும் மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்தோனேசிய உலமா சபை இராணுவத் தாக்குதல்கள் தொடரும் நிலையில் இந்த முயற்சி பயனற்றது என்று கூறி, இதிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
