இலங்கையின் கல்வி வரலாற்றில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவிலான பாரிய மறுசீரமைப்புத் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. மனப்பாடக் கல்வி மற்றும் கடும் போட்டித் தன்மைக்கு பதிலாக மகிழ்ச்சி, ஆர்வம் மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் “மாணவர் மையக் கல்வி முறையை” உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.
புதிய கல்விச் சட்டக்கட்டமைப்பை வெளியிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், ஒரு கசப்பான உண்மையை ஒப்புக்கொண்டார்: “நாட்டின் அதீத போட்டித்தன்மை கொண்ட, பாடப்புத்தகங்களை மட்டுமே சார்ந்திருக்கும் கல்வி முறை, பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை நீண்டகாலமாக சிதைத்து வந்துள்ளது.”
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தொடர்ச்சியாக முன்னேறிச் சென்றாலும், வெறும் நினைவாற்றலுக்கு மட்டும் மதிப்பளிக்கும் இந்த முறையினால், பாடப்பொருள் குறித்த ஆழமான புரிதலோ அல்லது ஆர்வமோ இன்றி பல மாணவர்கள் அமைதியாக இக்கல்வி முறையிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
“பல தசாப்தங்களாக நமது கல்வி முறை பாடப்புத்தக அறிவை மட்டுமே மையமாகக் கொண்டு, கடும் போட்டித்தன்மை மிக்கதாக இருந்துள்ளது,” என அவர் குறிப்பிட்டார். “இதன் விளைவாக, பெருமளவிலான மாணவர்கள் இடையில் கல்வியைக் கைவிடுவதைத் தடுக்க எம்மால் முடியாமல் போனது. திறமையான சில மாணவர்கள் முன்னேறினாலும், ஒவ்வொரு கட்டத்திலும் நாம் பல மாணவர்களை இழந்து வருகிறோம்.”
இந்தத் தருணத்தை ஒரு தேசிய திருப்புமுனையாக விவரித்த பிரதமர் அமரசூரிய, இது வெறும் பாடத்திட்ட மாற்றம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கல்விச் சூழலையும் மறுசீரமைப்பதற்கான ஒரு வாய்ப்பு என வலியுறுத்தினார்.
இந்த புதிய கல்வி முறை பின்வரும் ஐந்து முக்கிய தூண்களின் அடிப்படையில் அமையவுள்ளது:
- கல்விக் கட்டமைப்பு
- பாடத்திட்ட மேம்பாடு
- மனிதவள மேம்பாடு
- கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு
- மதிப்பீடு, ஆய்வு மற்றும் பொது உரையாடல்
இந்தக் கூறுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, நீண்டகாலமாக நடைமுறையிலுள்ள ‘ஆசிரியர் மையக் கல்வி’ முறையை மாற்றி, செயல்முறை வழிக் கற்றல், படைப்பாற்றல், சமூகத் திறன்கள் மற்றும் உளவியல் நலன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் ‘மாணவர் மையக் கல்வி’ முறையை உருவாக்கும் நோக்கம் கொண்டவை.
இந்த சீர்திருத்தத்தின் ஒரு முக்கிய அடையாளமாக, மாணவர்கள் சுமக்கும் பாடசாலைப் பைகளின் சுமையைக் குறைப்பதன் மூலம் அவர்களின் உடல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
“பாடசாலைப் பையின் எடை மட்டுமல்ல, அதிலுள்ள உள்ளடக்கங்களும் ஒரு சுமையாக மாறியுள்ளன,” என்று சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த அழுத்தம் மாணவர்கள் மட்டுமன்றி, அவர்களோடு சேர்ந்து கல்விச் சுமையைச் சுமக்கும் பெற்றோர்களுக்கும், குறிப்பாகத் தாய்மார்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
பதற்றமான கல்விச் கலாச்சாரத்தை ஒழித்து, கற்றல் என்பது அர்த்தமுள்ளதாகவும், சுவாரஸ்யமானதாகவும், அழுத்தங்களற்றதாகவும் இருக்கும் ஒரு சூழலை உருவாக்குவதே இந்த புதிய அணுகுமுறையின் இலக்காகும்.
